ஏஆர் ரகுமான் கச்சேரி மற்றும் அண்ணாமலை போராட்ட சர்ச்சை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திஷா மிட்டல் தீபா சத்யன்
ஈசிஆர் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏஆர் ரகுமான் கச்சேரிக்கு வந்து சென்றவர்களால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனம் அங்கு கடந்து சென்ற போது இந்த போக்குவரத்து நெரிசலால் சர்ச்சை ஏற்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி டிஜிபி சங்கர்ஜிவால் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டார். அது தொடர்பாக சம்பவ இடத்தில் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டார். மேலும் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தின் போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
அதனையடுத்து இன்று காலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவு விவரம்: சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் திஷா மிட்டல் அங்கிருந்து மாற்றப்பட்டு கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் அங்கிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னை அறிவுசார் சொத்து அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா நெல்லை மாநகர கிழக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.