தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று 18.03.2024 மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. இதில் சுமார் 300 பெண்களுக்கு எம்பிராய்டிங் பயிற்சி வகுப்பு இலவச டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்தியநாராயணன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தேமுதிக அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மகளிருக்கு டோக்கன் வழங்குவது தொடர்பாக தேமுதிக சார்பில் தேர்தல் கமிஷனில் அனுமதி பெறப்படாமல் நடத்தியது தெரியவந்தது. அது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சார்பில் கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.