16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த 26 வயது வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (26) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் புலன் விசாரணை செய்து, அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா கடந்த 08.02.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி மாதவ ராமனுஜம் இன்று (22.04.2024) குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. எல்லம்மாள், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் அருண் சுந்தர் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.