கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிராக போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.58 கிலோ கிராம் மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 03.01.2024 முதல் 09.01.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 28.58 கிலோ கிராம் மாவா, 3 செல்போன்கள், பணம் 1,00,430- மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.