கடந்த நவம்பர் மாதம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து மனு அளித்த 4 மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும், காவல் நிலையங்களில் மனு அளித்த 6 மூத்த குடிமகன்களின் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளதாகவும் சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று (13.12.2023) காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களின் 24 புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் -மாதம், காவல் ஆணையரகத்தில் புதன்கிழமைகளில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு பொதுமக்களின் 54 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் 4 மூத்த குடிமகன்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு, துணை ஆணையாளர்கள் மூத்த குடிமகன்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2வது தெருவில் வசித்து வரும் ரத்தினசபாபதி (வயது 81). என்ற மூத்தகுடிமகன் கடந்த 01.11.2023 அன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து, தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் அருள்ராஜ் என்ற நபர் வாடகை தராமலும் வீட்டை காலி செய்யாமலும் ஏமாற்றி வருவதாகவும், நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் மனு கொடுத்தார். இந்த மனு மீது விரைந்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், மூத்தகுடிமகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கோயம்பேடு காவல் துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோயம்பேடு, துணை ஆணையாளர் உமையாள், விருகம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் சுப்ரமணி, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் கடந்த 02.11.2023 அன்று சாலிகிராமத்தில் உள்ள மூத்தகுடிமகன் ரத்தினசபாபதியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். ரத்தினசபாபதி, மேற்படி சொந்த வீட்டில் அவரது மனைவி பானுமதி, (வயது 71) என்பவருடன் வசித்து வருவதும், இவர்களது மகன் அமெரிக்காவில் வசித்து வருவதும், ரத்தினசபாபதி கடந்த 2019ம் ஆண்டு, சுமார் 55 வயதுடைய அருள்ராஜ் என்பவருக்கு அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டதும், அருள்ராஜ் 4 வருடங்களாக சரிவர வாடகை தராமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக மேற்படி வாடகை வீட்டை பூட்டிச் சென்று வாடகையும் தராமல், வீட்டை காலியும் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது.
உடனே, காவல் துணை ஆணையாளர் உமையாள் எதிரிமனுதாரர் அருளுதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு, சென்னைக்கு வரவழைத்து, விசாரணை செய்த பின்னர், அருள்தாஸ் பழைய நிலுவை வாடகை தொகைக்கான காசோலையை மனுதாரருக்கு வழங்கி, சில வார்ங்களில் வீட்டை காலி செய்து விடுவதாக எழுத்து மூலமாக உறுதி அளித்தார்.
சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர், 7வது தெருவில் வசித்து வரும் திருமதி.காந்தா, பெ/வ.70 என்பவர் தனது மகன் தனது வீட்டு பத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டு, உடல்நலம் சரியில்லாத தன்னையும் கவனிக்காமல் இருந்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டி, 01.11.2023 அன்று காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அடையாறு துணை ஆணையாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், அடையாறு துணை ஆணையாளர் பொன் கார்த்திக்குமார், அடையாறு உதவி ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் புகார்தாரரான காந்தா அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்றார். எதிர்மனுதாரரான, புகார்தாரரின் மகன் கண்ணன் என்பவரையும் நேரில் அழைத்து விசாரணை செய்தார். விசாரணையில், மேற்படி சொத்து பத்திரம் தொடர்பாக, மனுதாரரின் மகள்கள் மற்றும் மகன் கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கில் தொடுத்து, நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் இவ்வழக்கை வாபஸ் பெற்று பத்திரத்தை ஒப்படைப்பதாகவும், தாய் காந்தா வாங்கிய கடனுக்கான தொகைகையும் அடைத்து விடுவதாகவும் கண்ணன் தெரிவித்து, எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்திருநகர் அனெக்சில் வசித்து வரும் கபாலி (84) என்ற மூத்த குடிமகன் 15.11.2023 அன்று பொதுமக்கள் குறை தீர்முகாமில் கொடுத்த புகார் காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த மனுவில் தனது மகன் மற்றும் மருமகள் தன்னையும், தனது வயதான மனைவியையும் மேற்படி வீட்டை தங்களது பெயருக்கு எழுதி கொடுக்க சொல்லி கொடுமைபடுத்துவதாகவும், அவர்களிடமிருந்து தங்களை மீட்டு தரும்படியும் குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோயம்பேடு காவல் துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், கோயம்பேடு, துணை ஆணையாளர் உமையாள் விருகம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.சுப்ரமணி, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் ஆழ்வார்திருநகரில் உள்ள மூத்தகுடிமகன் கபாலியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். பின்னர் எதிர்மனுதாரராகிய கபாலியின் மகன் மற்றும் மருமகளிடம் விசாரணை செய்து, மூத்த குடிமக்களான தந்தையும், தாயையும் துன்புறுத்தாமல், நல்லபடி கவனித்து கொள்ளவும் அறிவுறுத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்பேரில், எதிர்மனுதாரர்கள் இருவரும் இனி தொந்தரவு அளிக்கமாட்டோம் எனவும், இங்குள்ள வீட்டை காலி செய்து, தங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியேறுவதாகவும் உறுதியளித்து, எழுதி கொடுத்துள்ளனர்.
சென்னை, அசோக்நகர், 10வது அவென்யூ, பங்கஜம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நாராயணன் (80) என்ற மூத்த குடிமகன் அதே தினத்தில் (15.11.2023) காவல் ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் தான் மேற்படி அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளராக உள்ளதாகவும், தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து வீட்டின் மரம் தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்து தடையாக இருப்பதாகவும், மேற்படி மரத்தை அகற்ற சொன்னால் தகராறு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். மூத்தகுடிமகன் நாராயணன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அடையாறு துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அடையாறு துணை ஆணையாளர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் புகார்தாரர் மூத்தகுடிமகன் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து, எதிர்மனுதாரரையும் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதே போல, கடந்த நவம்பர்- மாதம், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் மனு அளித்த 80 வயதுக்குமேற்பட்ட 6 மூத்த குடிமகன்களின் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.