சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 56.6கிலோ கஞ்சா, 2.5 கிராம் OG Kush, 207 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.11.2023 முதல் 19.11.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 84 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 56.6 கிலோ கஞ்சா, 2.5 கிராம் OG Kush, 207 நைட்ரவிட் உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3 செல்போன்கள், பணம் ரூ.1,76,500/-, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் (NDPS) தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 814 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,782 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 866 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2023 முதல் 19.11.2023 வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 76 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.