பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்தலின் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி சீமா அகர்வால் உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் 28.08.2024 அன்று மாலை 6 மணியளவில் தனிப்படை போலீசார் சென்னை வெளிவட்டச் சாலை, செங்குன்றம் காந்தி நகர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நெமிலிச்சேரி நோக்கி வந்த ஈச்சர் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதற்குள் 5,100 கிலோ (5.1 டன்) ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதனை கடத்தி வந்த அரிசி உரிமையாளர்களான செங்குன்றத்தைச் சேர்ந்த பிரேம் குமார், மணிவண்ணன் (எ) போன்டா மணி மற்றும் ஈச்சர் வாகன ஓட்டுநரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரிடம் அதிக விலைக்கு கொடுப்பதற்காக ரேசன் அரிசியை கடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். விசாரணைக்குப் பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.