சென்னை நீலாங்கரை பகுதியில் 450 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்த நபரை கைது செய்து குட்காவை கைப்பற்றினர்.
நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (03.01.2024) ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் அண்ணா என்கிளேவ் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிபட்ட சௌந்தராஜன் என்பவர் அவரது வீட்டினருகே அனகாபுத்தூரில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து, சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த அனகாபுத்தூரைச் சேர்ந்த சவுந்திரராஜன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்தும், அனகாபுத்தூரில் மறைத்து வைத்த இடத்திலிருந்தும் மொத்தம் 450 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், எம்.டி.எம். உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சௌந்தராஜன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (03.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.