கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமிழக அமலாக்கப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனையைத் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக கல்வி நிலையங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் காவல் ஆணையர்களுக்கும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்பார்வையில் ஐஜி செந்தில்குமாரி தலைமையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜுன் 2024 முதல் கடந்த 3 மாதங்களில் 40,730 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக 5,006 வழக்குகள் பிரத்யேகமாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை அளித்த அறிக்கையின்
அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறையால் ரூ. 7.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டு குட்கா விற்பனை செய்யப்பட்ட 2,997 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தவிர கல்வி நிலையங்களுக்கு அருகே மணவர்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒழிக்க காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 391 குழுக்கள் இணைந்து சோதனைகள் நடத்தி வருகின்றன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை 10581 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். மேலும் 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அல்லது $pnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பலாம் என அமலாக்கப்பிரிவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.