சென்னை, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் மெயின் தெருவை் சேர்ந்தவர் சுந்தரம் (68). நேற்று (17.03.2023) காலை 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள அன்னப்பூர்ணா ஓட்டலில் காபி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண்மணியின் கைப்பை இருந்துள்ளது, உடனே முதியவர் சுந்தரம் அதனை திறந்து பார்த்த போது, அதில் தங்க நகைகள், பணம், ATM Card, ID Card, Driving License இருந்துள்ளது. உடனே முதியவர் சுந்தரம் அருகில் உள்ள புனித தோமையார் மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று கைப்பையை வாங்கி சோதனை செய்ததில் அதில் 40 சவரன் தங்க நகைகள், 2 கிராம் வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் ரூ.61,404/-, ATM Card, ID Card, Driving License இருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் புருஷோத்தமன் (பொறுப்பு புனித தோமையர் மலை) தலைமையில் புனித தோமையர் மலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தனசேகர், காவல் உதவி ஆய்வாளர் அஜய்குமார், தலைமைக்காவலர்கள் ஆதி நாராயணன், முதல் நிலைக்காவலர்கள் சந்தோஷ்குமார், வெண்ணிலா ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அந்த கைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அதில் இருந்த முகவரியை கண்டறிந்து நேரில் சென்று விசாரணை செய்ததில், கைப்பையை தவறவிட்ட பெண்மணியின் பெயர் ஜான்சி ராணி, (54), சென்னை கிண்டி, செங்கேணியம்மன் கோயில் முதல் தெருவைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்தது
மேலும் விசாரணையில் ஜான்சிராணியின் கணவர் சிவக்குமார் என்றும் அவர்களுக்கு அனுஷா என்ற மகளும் கார்த்திக் என்ற மகனும் இருப்பதாகவும், அனுஷாவிற்கு திருமணம் நடைபெற்று பெங்களூரில் வசித்து வருவதாகவும், ஜான்சி ராணி என்பவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்தது. அதனால் அவர் மறதியாக அவரது கைப்பையை வேறொரு வாகனத்தில் வைத்து விட்டு வந்து விட்டதாக தெரிய வந்தது. CCTV கேமராக்களை பார்வையிட்டதில் கிடைக்கப்பெற்ற புகைப்படத்தில் இருந்தவர் நேரில் பார்த்ததில் ஜான்சி ராணி என்பவர் தான் உறுதி செய்யப்பட்டது. ஜான்சி ராணி மனநிலை சரியில்லாதவர் என்பதனால் அவரது மகன் கார்த்திக் என்பவரை நிலையம் வரவழைத்து தங் நகைகளை காண்பித்ததில் அவர் தங்க நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தனது அம்மாவுடையது தான் என உறுதி செய்தார்.
இன்று (18.03.2024) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்படி 40 சவரன் தங்க நகைகள், 2 கிராம் வெள்ளிக்காசு, ரொக்கம் ரூ.61,404/- ATM Card, ID Card மற்றும் Driving License ஆகியவற்றை ஜான்சி ராணியின் கணவர் சிவக்குமார் மற்றும் மகன் கார்த்திக் ஆகியோரை நேரில் வரவழைத்து ஒப்படைத்தார். மேலும் கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் திரு.சுந்தரத்திற்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் தங்க நகைகளை தவறவிட்ட பெண்மணியை விரைவாக கண்டறிந்த மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை. காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.