எழும்பூர் கொலை வழக்கில் மிசோராம் பெண் உள்பட 4 நபர்கள் கைது

சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்த சத்யா, 22 என்பவர் கடந்த 10.09.2023 அன்று இரவு சுமார் 09.15 மணியளவில், எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள ஜுஸ் கடை அருகில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 4க்கும் மேற்பட்ட நபர்கள் சத்யாவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய டேவிட் புளியந்தோப்பு பிரசாத், 19, ரூபன், 35, அருண்குமார், 25, புழல் சரவணன் (எ) வெள்ளை சரவணன், திருவள்ளூர் விக்னேஷ், 23 ஆகிய 5 நபர்களை சம்பவம் நடந்த மறுநாளே கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முன்விரோதம் சத்யா மேற்படி எதிரிகளால் கொலை செய்யப்பட்டதும், இதில் எதிரி ரூபன் என்பவர் P-4 பேசின் பாலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

மேலும் எழும்பூர் காவல் நிலைய தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த, கிஷோர்குமார் (எ) கிஷோர், 23, குன்றத்தூர் பிரபாகரன் (எ) பிரபா, 24, போரூர் ஜீவானந்தம் (எ) ஜீவா மற்றும் மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்த ஜுலி (25) ஆகிய 4 நபர்களை நேற்று (15.09.2023) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment