கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் காலி பாட்டில்களை வீசிய 4 பேர் கைது

சென்னை, தி.நகர் பகுதியில் CPI மாநில தலைமை அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தி.நகர், தெற்கு போக் சாலையில் (R-1 மாம்பலம் கா.நி. எல்லை) அமைந்துள்ள CPI மாநில தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தின்’பின்புறம், டாக்டர் தாமஸ் சாலையில் ஒரு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. நேற்று (27.10.2023) இரவு, மேற்படி குடியிருப்பில் வசித்து வரும் நான்கு நபர்கள் மதுபோதையில் மேற்படி கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மேற்படி அலுவலகத்தின் காவலாளி சுதாகருடன் தகராறில் ஈடுபட்டதுடன், கட்சி அலுவலகத்திற்குள் கற்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் மேற்படி குடியிருப்பிலிருந்து கட்சி அலுவலகத்தின் மீது கற்கள் மற்றும் காலி மதுபாட்டில்களையும் வீசியுள்ளனர்.

இது குறித்து சிவா (தென் சென்னை மாவட்ட செயலாளர், CPI) மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட திநகர் தாமஸ் ரோட்டைச் சேர்ந்த அலெக்ஸ், 22, பாரதிராஜா, 20, நாகராஜ், 21, பார்த்திபன், 21 ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். மேலும் விசாரணையில் மேற்படி கட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்த முருங்கைமரத்திலிருந்து கம்பளி பூச்சிகள் மேற்படி குடியிருப்பிக்குள் வருவதாகவும், அதனை வெட்ட கூறி குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் 2 நாட்களுக்கு முன்னர் முருங்கை மரத்தை வெட்டி அகற்றிய நிலையில், நேற்று மேற்படி நபர்கள் அருகிலுள்ள செடிகளிலிருந்தும் பூச்சிகள் வருவதாக கூறி காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டு அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலிபாட்டில்களை வீசியுள்ளது தெரியவந்தது. மேற்படி நபர்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை. விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட 4 நபர்களும் இன்று (28.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

Comments (0)
Add Comment