சென்னை பெருநகர காவல் “காவல் கரங்கள்” உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் சிறுமி உள்பட 4 பேர் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை நகரில் காவல் கரங்கள் என்ற காவல் உதவி மையம் மூலம் காணாமல் போன நபர்கள், ஆதரவின்றி சுற்றித்திரியும் நபர்களை கண்டுபிடித்து அவர்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், பொது மக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைபடும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, பெண்களுக்கான உதவி எண் (1091), குழந்தைகள் (1098), மூத்த குடிமக்கள் (1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்கள் (94999 57575), எஸ்எம்எஸ் அடிப்படையிலான புகார்கள் (95000 99100), மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான “காவல் கரங்கள்” உதவி எண் (9444717100) உள்ளிட்ட அவசர சேவைகள் மூலம் உடனடியாக பொதுமக்களுக்கு உதவியையும், வீடற்ற உதவிகளற்ற நபர்களுக்கு உதவிட ஒருங்கிணைப்பையும் உறுதி செய்கிறது.
இந்த வகையில் கடந்த 14.04.2025 அன்று இலக்கியா (29) என்ற பெண் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம், ஹால்ஸ் ரோட்டில், காவல் கரங்கள் குழு மூலம் மீட்கப்பட்டார். காவல்துறையினர் மதுரை, செல்லூரில் அவரது குடும்பத்தினரைக் கண்டறிந்து அவரது கணவர் அன்புவுடன் பாதுகாப்பாக மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டார். இதே போன்று 7 வயது சிறுமி ப்ரியா, ராஜலானி (43), சோனா ஸ்ரீனிவாசன் (54) ஆகியோரை அவர்களது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் கண்டறிந்து மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டனர்.
கடந்த 13.04.2025 முதல் 23.04.2025 வரை 18 ஆதரவற்ற நபர்கள் மீட்கப்பட்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டும் 4 நபர்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டனர். 3 நபர்கள் மனநல சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 5 உடல்நிலை சரியில்லாத நபர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் உரிமை கோரப்படாத 48 உடல்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 8,207 நபர்கள் மீட்கப்பட்டு, -5,575 நபர்கள் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,298 நபர்கள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். -972 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநல சிகிச்சை பெற்றும். -463 பேர் மன நல சிகிச்சை பெற்று குடும்பத்தினருடன் மீண்டும் சேர்க்கப்பட்டனர். 362 நபர்கள் உடல்நலக்குறைவினால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் பெற்றனர்.
2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “காவல் கரங்கள்” உதவி மையம் கைவிடப்பட்ட மற்றும் வீடற்ற 200 க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளது. மேலும் காவல் கரங்கள் பிரத்யேக ஹெல்ப்லைன் எண். 94447 17100 மூலம் 24 மணி நேரமும் தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. வீடற்ற அல்லது கைவிடப்பட்ட நபர்களை துயரத்திலிருந்து மீட்டு பராமரிப்பதில் உதவ. காவல் கரங்கள் உதவி எண்ணை (94447 17100) தொடர்பு கொள்ளுமாறு அனைத்து பொதுமக்களையும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.