சென்னை எழும்பூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்தவர் (சத்யா, வயது 22). நேற்று (10.09.2023) இரவு சுமார் 9.15 மணியளவில், எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள ஜுஸ் கடை அருகில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 4க்கும் மேற்பட்ட நபர்கள் சத்யாவை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பைச் சேர்ந்த டேவிட் பிரசாத் (19), ரூபன் (35), அருண்குமார் (25), புழல் சரவணன் (எ) வெள்ளை சரவணன் (34), ஆகிய 4 நபர்களை இன்று (11.09.2023) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முன்விரோதம் காரணமாக சத்யா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதும், இதில் எதிரி ரூபன் என்பவர் பேசின் பாலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் நால்வரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (11.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.