சென்னை, எம்.கே.பி.நகர் மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து, 3,737 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் நேற்று (15.08.2023) மாலை, எம்.கே.பி.நகர் மேம்பாலம், மேற்கு அவென்யூ அருகில் 1 பெண் உட்பட 2 நபர்கள் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த சுதா, 37, கொடுங்கையூர் சங்கர், 28 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஓரிடத்தில் பதுக்கி வைத்திருந்த 180 மி.லி. அளவு கொண்ட 2,750 மதுபாட்டில்கள் மற்றும் 300 பீர்பாட்டில்கள் என மொத்தம் 3,050 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே எதிரி சுதா 2 வழக்குகளும், எதிரி சங்கர் மீது 1 வழக்கும் உள்ளது தெரியவந்தது.
இதே போல, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் நேற்று (15.08.2023) மாலை, கோட்டூர்புரம், எல்லையம்மன் கோயில் தெருவிலுள்ள பெட்டிக்கடையில் ரகசியமாக, மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த வினோத் (எ) விவேக், வ/35, த/பெ.ஜெயவேல், எல்லையம்மன் கோயில் தெரு, கோட்டூர்புரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கடையில் பதுக்கி வைத்திருந்த 180 மி.லி. அளவு கொண்ட 651 மதுபாட்டில்கள் மற்றும் 36 பீர்பாட்டில்கள் என மொத்தம் 687 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிர வினோத் மீது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே 1 வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.08.2023) நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றங்கள் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.