2006ம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, லஷ்மிபுரம், கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த யாகப்பா நாயக்கர். இவர் தனக்குச் சொந்தமாக லஷ்மிபுரத்தில் உள்ள 90 சென்ட் நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக 2006ம் ஆண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி விசாரணை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, மேற்படி நில மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, எழும்பூர், CCB & CBCID நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (02.03.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது.
நில மோசடி வழக்கில் எதிரி மாதவன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பணம் ரூ. 6 ஆயிரம்- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி விசாரணை பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.