சென்னை மதுரவாயலில் தப்பியோடி விட்டு மீண்டும் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது: 430 கிலோ பறிமுதல்

சென்னை மதுரவாயலில் கடந்த வாரம் காரில் 400 கிலோ குட்கா கடத்தி வந்து தப்பியோடி, மீண்டும் 2 கார்களில் குட்கா கடத்தி வந்த 3 நபர்கள் கைது. மொத்தம் 430.5 கிலோ குட்கா, பணம் ரூ. 3,25,660- மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DAB ToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (14.10.2023) அதிகாலை சுமார் 00.30 மணிக்கு, வானகரம் சோதனை சாவடி அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தியபோது, 2 கார்களிலிருந்த 3 நபர்களும் தப்பியோட முயன்றபோது, காவல் குழுவினர் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 கார்களையும் சோதனை செய்தபோது, காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன் பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (28), பஜன்லால் (24), பரசராம் (28) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30.5 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ. 3,25,660-, ஸ்கார்பியோ மற்றும் மகேந்திரா XUV ஆகிய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 நபர்களும் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்து சென்னையில் விநியோகம் செய்து வந்ததும், இவர்கள் கடந்த 11.10.2023 அன்று காரில் 400 குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்தபோது, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மடக்கியபோது, காரை விட்டு தப்பிச் சென்ற நிலையில், 400 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்ததும் தெரியவந்தது. ஆக மொத்தம் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 430.5 கிலோ குட்கா பாக்கெட்டுகள், பணம் ரூ. 3,25,660- மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (14.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment