சென்னை திநகர், ராமேஸ்வரம் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அங்குள்ள தனது சொந்த கட்டிடத்தில் BABU RAO MELTING SHOP என்ற பெயரில் பழைய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 27.11.2023 ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் வழக்கம் போல நகை பட்டறையை பூட்டி விட்டு மறுநாள் காலை 28.11.2023ம் தேதி 7 மணியளவில் வந்து பார்த்தார். அப்போது தனது நகை பட்டறையில் உருக்கிய நிலையில் வைத்திருந்த சுமார் 6 கிலோ மதிப்புள்ள சுமார் 30 லிட்டர் தங்க திரவம் காணவில்லை எனவும் கண்டுபிடித்து தருமாறு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி, துணைக்கமிஷனர் பொன் கார்த்திக் குமார் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில் திநகர் உதவிக்கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு தனிப்படையும், தொலைபேசி அழைப்பு விபரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு தனிப்படையும் மற்றும் கள விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு தனிப்படையும் என மூன்று தனிப்படையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். தனிப்படையினரின் விசாரணையில் மேற்படி BABU RAO MELTING SHOP-ல் முன்னர் பணிபுரிந்து வந்த மகாராஷ்டிரா மாநிலம், வங்லி, கான்பூர் தாலுகாவில் உள்ள பார்படே கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத் (24) என்பவரும், அவரது உறவினரான நானாசோ படேல் (30) என்பவரும் தற்போது மேற்படி கடையில் பணிபுரிந்து வரும் கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்பவருடன் சேர்ந்து தங்க திரவத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
குற்றவாளிகள் சோம்நாத் மற்றும் நானாசோ படேல் ஆகிய இருவரும் அவர்களது சொந்த ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்னை கோயம்பேட்டிற்கு வந்து அங்குள்ள மார்க்கெட் பகுதியில் தங்கியிருந்தனர். குற்றவாளி ராகுல் என்பவர் மேற்படி கடையில் 26.11.2023-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலையில் அதிகளவிலான பழைய தங்க நகைகள் உருக்கப்படவிருப்பதாக மேற்கண்ட இருவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சோம்நாத் என்பவர் தாங்கள் உள்ளே வந்து செல்வதற்காக அங்குள்ள பூட்டுகளை திறந்த நிலையில் வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி ராகுல் அங்கு பணிபுரியும் மற்று ஊழியர்கள் அனைவரும் தூங்கிய பின்னர் அனைத்து பூட்டுகளையும் திறந்து வைத்துவிட்டு தானும் தூங்குவது போல நடித்துள்ளார். திட்டமிட்டபடி அங்கு வந்த மற்ற இருவரும் முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு கடைக்குள் பதுங்கி சென்று அங்கிருந்த உருக்கப்பட்ட தங்க திரவத்தை 40 லிட்டர் கொள்ளளவுள்ள கேனில் மாற்றி எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பின்தொடர்ந்ததில் குற்றவாளிகள் இருவரும் கோயம்பேடு சென்றுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றவாளிகள் இருவரும் சென்னைக்கு வந்தவுடன் கோயம்பேடு மார்க்கெட் பார்க்கிங் பகுதியில் இருந்த ஒரு சரக்கு (Bolero pickup) வாகனத்தை தாங்கள் இருவரும் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு இடம் பார்த்து விட்டு சென்று விடலாம் என தங்களது இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், தற்போது தங்களால் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடியாதவாறு மிகவும் சோர்வாக உள்ளதாகவும் அதனால் தங்களை மகாராஷ்டிரா எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டால் தாங்கள் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுவதாகவும் கூறி வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மேலும் விசாரணையில் மேற்படி இருவரும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் 26.11.2023-ம் தேதி சுமார் 5 மணியளவில் தி.நகரிலிருந்து ஆட்டோவில் கோயம்பேடு சென்றடைந்து அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பெங்களுருக்கு சென்றுள்ளதும் மேற்படி சரக்கு வாகன ஓட்டுநரிடம் தொழிற்சாலை உபயோகத்திற்காக கெமிக்கல் கொண்டு செல்வதாகக் கூறி மேற்படி தங்க திரவத்தை வாகனத்தில் கொண்டு சென்றுள்ளதும் தனிப்படையினரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த மேற்படி சரக்கு வாகன ஓட்டுனர் கர்நாடகா மாவட்டம், சித்திர துர்கா என்ற இடத்தை அடைந்ததும் மேற்கொண்டு செல்ல மறுத்துள்ளார். பின்பு மேற்படி குற்றவாளிகள் இருவரும் அவர்களது சொந்த ஊரின் புறநகர் பகுதியை அடைந்த பின்னர் தங்க திரவத்தை பகிர்ந்து கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற கடையில் பணிபுரிந்து வந்த குற்றவாளி ராகுல் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தானும். மேற்கண்ட இருவரும் சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதை ஒப்புக்கொண்டார். தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் கள விசாரணையின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, சோம்நாத், அவரது உறவினர் நானாசோ படேல் என்பவரும் அவர்களது சொந்த ஊரில் வைத்து தனிப்படையினரால் கடந்த 30.11.2023-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 30 லிட்டர் தங்க திரவம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் டிரான்ஸ்சிட் வாரண்டு பெற்று போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். மேலும், தற்போது மேற்படி கடையில் பணிபுரிந்து வரும் கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி ராகுல் 19 என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.