14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது: 490 கிலோ கஞ்சா பறிமுதல்: ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை

கடந்த 14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து 490 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ராதிகா மேற்பார்வையில் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 14.10.2023 முதல் 28.10.2023 வரை மாநிலம் முழுவதும் பெண்கள் உட்பட 291 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 54 லட்சம் மதிப்புள்ள 490கிலோ கஞ்சா, 70கிராம் ஹெராயின் மற்றும் 112 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ரூபாய் 12,00,000- லட்சம் மதிப்புள்ள 120 கிலோ கஞ்சாவும், கோயம்பத்தூர் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவினரால் ரூபாய் 5.00.000- லட்சம் மதிப்புள்ள 70 கிராம் ஹெராயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது. 14 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, நீதி மன்றத்தால் கடுங்காவல் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 12 வருட கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1,70,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 15 நாட்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான 153 விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சட்ட விரோத போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984-10581 என்ற எண்ணில் வாட்ஸ் அப் குறுந்தகவல், புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டத்திற்கும் பிரத்யேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் மதுவிலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல்களை பொது மக்கள் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment