2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (W-23 Royapet AWPS) இ.த.ச. மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் (IPC & POCSO Act) வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 38 வயது நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்,
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (26.09.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட 38 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 38 வயது குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.