தூத்துக்குடி, தாளமுத்து நகரில் பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து -4 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). இவர் தனது மனைவி நாகஜோதி (29)யுடன் கடந்த மாதம் 30ம் தேதியன்று இரவு இருசக்கர வாகனத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாநகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் நாகஜோதி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து நாகஜோதி தாளமுத்துநகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அர்னால்டு (23), தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பின்லேடன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பவுன் தங்கச்செயின் மற்றும் நகை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான தனிப்படையினரான தெர்மல்நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல்நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் முதல்நிலைக் காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் மணிராஜன் உள்ளிட்ட தனிப்படையினரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.