தூத்துக்குடி, முறப்பநாட்டில் ஆற்று மணல் திருடிய இருவரை கைது செய்த போலீசார் 12 மூட்டை ஆற்று மணல், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று (07.01.2024) அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாணல்காடு பகுதியில் உள்ள ஆற்று பாலத்தின் கீழே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர்கள் வல்லநாடு மருத்துவர் தெருவை சேர்ந்த கணபதி மகன் சரவணன் (45), வல்லநாடு தொண்டைமான் தெருவை சேர்ந்த முருகசேர்வார் மகன் வேம்பையா (42) மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடிக் கொண்டிருப்பது விசாரணையில் வெளிவந்தது.
அதனையடுத்து போலீசார் சரவணன் மற்றும் வேம்பையா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 12 மூட்டை ஆற்று மணல், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.