சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை பாலவாக்கத்தைச்சேர்ந்த ரகுபதி, 42 என்ற குற்றவாளி மீது நில மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி தடுப்புப்பிரிவிலும், மேலும் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான ஜெயபால், செந்தில்குமார், முத்துக்குமார் (எ) மதன், நவீன், இசக்கிமுத்து (எ) போஸ், சொக்கலிங்கம் (எ) சுரேஷ், ஜான் கென்னடி (எ) கென்னடி, சுதாகர் பிரசாத் ஆகிய 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்திக் (எ) அவதார் கார்த்திக் என்பவர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும், கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்ட சந்திரா என்ற பெண் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்திலும், சோழாவரத்தைச் சேர்ந்த சிவா (எ) வெங்கடேஷன், மணிகண்டன் (எ) மணி ஆகியோர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்திலும், கார்த்திக் (எ) திலீப் கார்த்திக், என்பவர் மீது கொத்தவால்சாவடி காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். அதனை பரிசீலனை செய்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 15 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.