சென்னையில் 3 இடங்களில் 12.5 கிலோ கஞ்சா சிக்கியது: 7 பேர் கைது

மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை மற்றும் புனித தோமையர்மலை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 நபர்களை கைது செய்த போலீசார் 12.5 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (19.09.2023) மதியம், மாதவரம், 200 அடி ரோடு, ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் நின்றிருந்த சில நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

     

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சோழவரம் பிரபாகரன் (எ) பிரபா, 32, சுரேஷ், 37, அரியலூர் வினோத்குமார், 22, விஜயரங்கம், 29, நாகப்பட்டினம் ராபர்ட் செல்லையா, 27 ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 கிலோ 800 கிராம் கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் மேற்படி கஞ்சா ஆந்திரமாநிலத்தில் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்தது தெரியவந்தது. மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதே போல, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (19.09.2023) மதியம், புதுவண்ணாரப்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் உள்ள பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு கஞ்சா வைத்திருந்த புது வண்ணாரப்பேட்டை அருண்குமார், 20 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.09.2023) மதியம், ஆலந்தூர், M.K.N சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு கஞ்சா வைத்திருந்த ஆலந்தூர் தருண் ஸ்ரீகாந்த், 21 என்பவரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 7 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நேற்று (19.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Comments (0)
Add Comment