சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பெண்களுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமியை அவரது உறவுக்கார பெண் அழைத்துச் சென்று மற்ற பெண்கள் உதவியுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 4 பெண்கள் மற்றும் 1 ஆண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று (06.01.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 4 பெண்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3 பெண் குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், 28 வயதான 4வது பெண் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கைது செய்யப்பட்ட ஆண் குற்றவாளி இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த சைதாப்பேட்டை AWPS காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
*****