ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி சொன்ன இந்துக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ததால் ஆழ்வார்திருநகரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளை மூழ்கடித்து பெரும் பிரளயம் ஏற்பட்டது. ஆழ்வார்திருநகரி, கேம்பலாபாத், மணல்குண்டு, செல்வராஜ் நகர் உள்ளிட்ட

அனைத்து பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளானது. அந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படகில் மீட்டு ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம் பகுதியில் உள்ள ஐக்கிய முஸ்லிம் ஜமாத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை அழகியமணவாளபுரம் முஸ்லிம் தெருக்களில் (மொய்தீன் தெரு, தைக்கா தெரு, பள்ளிவாசல் தெரு, யூசுப் தெரு, அக்பர் தெரு) வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மற்றும் இளைஞர்கள் வரவேற்று அரவணைத்து பாதுகாத்தனர். அவர்களுக்கு உடை, பெட்ஷீட், பாய் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவினர். மேலும் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சார்பில் அவர்களுக்கு தொடர்ந்து 2 நாட்கள் உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

அழகியமணவாளபுரம், இஸ்லாமிய மக்கள் கருணையுடன் செய்த உதவியைக் கண்டு நெகிழ்ந்த, செல்வராஜ் நகர் ஊர் பொதுமக்கள் கடந்த 07.01.204 அன்று கைகளில் நன்றி தெரிவிக்கும் பதாகையை ஏந்தியபடி அங்கு ஊர்வலமாக திரண்டு வந்தனர். அழகியமணவாளபுரம் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமீது அப்பாஸ், செயலாளர் லாபிர் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் முஹம்மது யாகூப் பாகவி, என். அப்துல் அஹத் காஷிபி, எஸ். நிஜாமுத்தீன் ரஹ்மானி, மதரசத்துர் ரஹ்மானியா செயலாளர் அய்யூப் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் ஊர் ஜமாத் நிர்வாகிகளுக்கு ஊர் பொது மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கைகூப்பி நன்றி தெரிவித்தனர். 2 நிமிடம் மவுனமாக இருந்து அழகியமணவாளபுரம் இஸ்லாமிய மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். ஜாதி, மத, பேதமின்றி அழகியமணவாளபுரம் முஸ்லிம் மக்கள்

சகோதரத்துவத்துடன் உதவி செய்ததற்காக செல்வராஜ் நகர் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து நன்றி தெரிவித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஆழ்வார்திருநகரி வார்டு உறுப்பினர்கள் ஹாஜிரா, வழக்கறிஞர் அஹமது காதர் மற்றும் ஊர் ஜமாத் உறுப்பினர்கள் அனீஸ் அகமது ரிபாயி, ஜவாஹிர் அலி, சபுர்தீன், ரிஸ்வி, ஆஷிக்கீன், அகமது கபீர், தமீம் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

https://youtube.com/shorts/oIuTkb5UJOo?feature=share

 

 

 

 

 

Comments (0)
Add Comment