அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவுக்கே சுகம், சுகம். எவருக்கும் இதிலே சந்தேகம் வேண்டாம். ஏற்றுக் கொண்டோருக்கே ஜெயம், ஜெயம்…
முஹ்யித்தீன் வாப்பா
அந்த வழியில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிலாங்கோட்டில் பிறந்து, அல்லாஹ்வின் அருளைப் பெற்று அளவிலா அருளுடன் விளங்கிய இறைநேசர் மக்கட்டி லெப்பை என்கிற ஜமேஷா அவ்லியா ரழியல்லாஹ் அன்ஹு அவர்களின் இறை நேச வாழ்க்கை கேட்கும் போது பிரமிக்க வைக்கிறது. அது தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் அதிசய சக்தி என அழைக்கப்படும் புறாக்கார லெப்பை 94 வயதை எட்டிய முஹ்யித்தீன் வாப்பா சொன்ன விஷயங்கள் மெய்சிலிர்க்க வைத்தது.
”மக்கட்டி லெப்பை திருவிலாங்கோட்டில் பிறந்து, வளர்ந்து சிறந்த தவஞானியாக இறைநேசராக வாழ்ந்தவர். அவர் வாழ்ந்தது 1950ம் ஆண்டுகளில் என கூறப்படுகிறது. மக்கட்டி லெப்பை திருவிலாங்கோடு மக்களுக்கு பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். செய்வினை, சூனியம், ஏவல், பில்லி, பேய் பிசாசுகளால், நோய் நொடியால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு அல்லாஹ்வின் திருநாமங்களை ஜெபித்து தனது தவ வலிமையால் தண்ணீர் ஓதிக் கொடுத்து அவற்றை நீக்கி அதிசயங்களை நடத்திக் காட்டியுள்ளார்.
அதற்காக மக்கட்டி லெப்பை யாரிடமும் எந்த கை மாறும் பெற்றது இல்லை. அதற்கு மாறாக இறை ரகசியங்கள் குறித்து போதனைகளை மக்களுக்கு புரியும் வகையில் ஆன்மிக சிந்தனைகளை புகுத்தினார். மக்கட்டி லெப்பை திருவிலாங்கோட்டடில் உள்ள டீக்கடைக்குச் சென்றால் அவர் குடித்த டம்ளரில், டீயை ஊற்றிக் குடிக்க பெரிய மக்கள் கூட்டம் அங்கு வெள்ளம் போல கூடி நிற்பார்கள். மக்கட்டி லெப்பை அருந்திய டீ டம்ளரில் குடித்தால் அந்த மனிதருக்கு உடம்பில் தொற்றியுள்ள கெட்ட சக்திகளின் தாக்கம் விலகியுள்ளது. நோய் நொடிகள் தீர்ந்துள்ளது என்பதால் மக்கட்டி லெப்பை டீ குடித்த டம்ளருக்கு அத்தனை மகிமை என்பார்கள்.
இன்னும் எண்ணற்ற சக்திகளை தன்னுள் அடக்கி வைத்துள்ள மக்கட்டி லெப்பையின் உண்மையான பெயர் ஜமேஷா அவ்லியா என்பது யாரும் அறியாதது. திருவிலாங்கோட்டில் பிறந்து அல்லாஹ்வின் பொக்கிஷங்களை தனது ஆன்மிக போதனை மூலமும், அதிசய செயல் பாடுகள் மூலமும் வெளிக்காட்டிய மக்கட்டி லெப்பை திடீரென திருவிலாங்கோட்டில் தான் வாழ்ந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டார். கூடு விட்டு கூடு பாயும் சக்தி கொண்ட மக்கட்டி லெப்பை பின்னர் கோவையில் தோன்றி வாழ்ந்தார் என கூறப்படுகிறது. கோவை டவுன் ஹால் பகுதியில் வாழ்ந்து அங்கேயே ஜீவ சமாதியானார்.
அவரது புனித அடக்கத்தலமான ஹஜ்ரத் ஜமேஷா அவ்லியா தர்கா கோவை சிட்டி, டவுன் ஹாலில், பிரகாசபுரம் பகுதியில் உள்ளது. அவரது உயரம் சுமார் 4 அடி மட்டுமே. குள்ளமான உருவம் கொண்ட அவரது அடக்கத் தலத்தின் நீளத்தை பார்த்தாலே இது தெரியவரும். உலகில் வாழ்ந்த பெரும்பான்மையான வலிமார்களின் உயரம் மிகச் சிறிய அளவுதான் என்பதை வரலாற்று நூல்களில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். கோவையில் உள்ள ஜமேஷா அவ்லியா தர்காவுக்கு வியாழன் இரவு மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினத்தில் சென்று தங்கள் நாட்ட தேட்டங்களை கேட்டால் அது நிறைவேறுகிறது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இறை நேசர்களுக்கு என்றும் அழிவில்லை.அவர்கள் இன்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு மக்களுக்கு இறை தொண்டு செய்கின்றனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை” என்றார் முஹ்யித்தீன் வாப்பா.
தொடர்பு 96775 66413