சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அடையார் மற்றும் தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மூத்த குடிமக்களின் புகார்கள் தொடர்பாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் வசிக்கும் மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் மீது, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, கோடம்பாக்கம், சுப்புராயன் நகரில் மூத்த குடிமகன் சரவணன் (வயது 82) அவரது மனைவி லலிதா (வயது 72) என்பவருடன் வசித்து வருகிறார். சரவணன் மேற்படி முகவரியில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வாடகைக்கு குடியிருந்து வரும் 3 நபர்களும் சரியாக வாடகை கொடுக்காமல் மேற்படி முதியவரை ஏமாற்றி வந்துள்ளது குறித்து சரவணன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு கொடுத்திருந்தார். மேற்படி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுவை சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இந்த மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தி.நகர் காவல் துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தி.நகர் காவல் துணை ஆணையாளர் அங்கிட் ஜெயின் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று 18.09.2023 கோடம்பாக்கத்திலுள்ள முதியவர் சரவணன் வீட்டிற்கு நேரில் சென்று வயதான தம்பதியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் முதியவருக்கு சொந்தமான 3 வீடுகளில் கார்த்திகேயன், சுமதி (எ) ஆஷா மற்றும் சாரூ ஆகியோர் வாடகைக்கு இருந்து வருவதும், மூவரும் கடந்த 4 மாதங்களாக மேற்படி வீடுகளுக்கான வாடகை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் வாடகைதாரர்களான கார்த்திக்கேயன், சுமதி (எ) ஆஷா மற்றும் சாரு ஆகியோரிடம் விசாரித்து, காவல்துறை சார்பாக பல்வேறு அறிவுரைகள் கூறியதன்பேரில், வாடகைதாரர்கள் மூவரும் 1 மாத கால அவகாசத்தில் தற்போது வசிக்கும் வாடகை வீடுகளை காலி செய்து, வேறு வீட்டிற்கு வாடகைக்கு செல்வதாக உறுதியளித்து எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆகவே, மூத்த குடிமக்களாகிய தங்களை அலைகழிக்காமல் தனது புகார் மனு மீது நேரில் வந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர காவல்துறைக்கு திரு.சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
அடையாறு காவல் மாவட்டம்
இதே போல அடையாறு, பரமேஸ்வரி நகர் 1வது தெருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி (வயது 78) என்பவர் 14.09.2023 அன்று தனியார் நிறுவனத்திலிருந்து வாடகை ஓட்டுநரை 4 மணி நேரத்திற்கு ரூ. 440- தருவதாக கூறி ஓட்டுநரை அழைத்துச் சென்று வேலை செய்த பின்ன, மேற்படி வாடகை ஓட்டுநர் ரூ.440-க்கு பதிலாக 475- கேட்டுச் சென்றதாகவும், என்னிடமிருந்து ரூ. 35 அதிகமாக வாங்கிச் சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு 15.09.2023 அன்று மின்-அஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் இம்மனு கொடுத்த மூத்த குடிமகனாகிய நரசிம்ம மூர்த்தி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, அடையாறு துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், அடையாறு காவல் துணை ஆணையாளர் பொன் கார்த்திக்குமார் 16.09.2023 அடையாறில் உள்ள மூத்த குடிமகன் நரசிம்ம மூரத்தி வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மூத்த குடிமகனிடம் அதிகமாக பணம் வசூலித்த Top 4 call drivers நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளை வரவழைத்து, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் வாடகை ஓட்டுநர் ஒருவர், புகார்தாரரிடம் அதிகமாக பணம் வசூலித்து சென்றது குறித்தும், இவ்வாறு பொதுமக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை அவர்களின் வயோதிகம் காரணமாக அதிக பணம் வசூலித்தாலோ, ஏமாற்றினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து தங்களிடம் பணிபுரியும் ஓட்டுநர் அனைவருக்கும் அறிவுறுத்தி, இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக்கூடாது என துணை ஆணையாளர் அறிவுரைகள் வழங்கினார்.
காவல்துறையின் அறிவுரைகளை கட்டாயம் கடைபிடிப்பதாகவும், மூத்த குடிமகனிடம் அதிகமாக பணம் வசூலித்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து, அனைத்து ஓட்டுநர்களுக்கும் இது குறித்து எடுத்துரைப்பதாகவும், ஓட்டுநரின் அநாகரிச செயலுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்பவதாகவும், தனியார் நிறுவன நிர்வாக அதிகாரிகள், மூத்த குடிமகன் நரசிம்ம மூர்த்தி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
நரசிம்ம மூர்த்தி தனது புகார் மீது வீடு தேடி வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோருக்கு இ-மெயில் மூலம் நன்றி தெரிவித்து, காவல்துணை ஆணையாளர், அடையாறு மற்றும் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் நேரில் சென்று நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் ஆணையிட்டுள்ளதன்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், புகார் கொடுக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.