தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எழுதிய வெல்ல நினைத்தால் வெல்லலாம் நூலிற்கு தமிழக அரசு பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் சட்டம் ஒழுங்கு காவல் பணி மட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் காவலர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையில் பல புத்தகங்களை எழுதி உள்ளார்.
அந்த வகையில் அமல்ராஜ் எழுதிய ‘வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ புத்தகம் கல்வியியல் மற்றும் உளவியல் வகைப் பாட்டில் 2020-ம் ஆண்டின் சிறந்த புத்தகமாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நூலை எழுதிய அமல்ராஜுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் 14.2.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில்
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கி கவுரவித்தார்.
இந்தப் புத்தகத்தில் எழுத்து நடை, மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் ஆகியவற்றில் புதைந்திருக்கும் வல்லமைகளை விளக்குகிறது. இந்த வல்லமைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தினால் யார் வேண்டுமானாலும் அவர்கள் நினைத்ததை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையையும் வாசகர்களுக்கு இந்த புத்தகம் தருகிறது.
நம் வெற்றி நம் கையில் உள்ளது என்பதையும் அவ்வெற்றியை அடைய என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த நூல் பட்டியலிடுகிறது. இந்த சிறப்பம்சங்களை பாராட்டி அமல்ராஜுக்கு இந்த பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நூல் தவிர அமல்ராஜ் எழுதிய ‘காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்’, ‘வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்’, ‘சிறகுகள் விரித்திடு’, ‘போராடக் கற்றுக்கொள்’ போன்ற பிற நூல்கள் சுய சிந்தனையை, அறிவை , தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறந்த புத்தகங்கள் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளதும், அவற்றை கோவை விஜயா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.