பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர் சுப்ரமணியம். இவரிடம் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாமூண்டீஸ்வரி, சந்திரா, முனுசாமி என்ற தங்கம் ஆகியோர் தங்களுக்கு சென்னை, அமைந்தகரை, வில்லிவாக்கம் கிராமத்தில் 9,108 சதுரடி இடம் உள்ளதாகவும் அதனை தங்களது பூர்விக சொத்து என கூறி விற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த இடத்துக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று கொண்டு சுப்பிரமணியை ஏமாற்றியுள்னர். இது தொடர்பாக சுப்பிரமணி சென்னை போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-II) உதவி ஆணையாளர் பெனாசிர் பாத்திமா தலைமையில், EDF-II, Beta_IV காவல் ஆய்வாளர் பிரபா மற்றும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணியிடம் நில மோசடி நடந்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் சாமூண்டீஸ்வரி (45), சந்திரா (40) ஆகிய இருவரை இன்று (13.03.2025) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சென்னை, எழும்பூர் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் தலைமறைவு எதிரி தங்கத்தை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.