கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார்

கர்னாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்னாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு சித்தராமையாவை முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமாரை துணை முதலமைச்சராகவும் நியமித்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அதன் பின்னர் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார். அதன்படி கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். பெங்களூர் கஸ்தூரிபா சாலையில் உள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் நண்பகல் 12.30 மணி அளவில் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. கர்னாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். இருவருக்கும் கவர்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்களாக பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமதுகான் ஆகியோரும் பதவி ஏற்றனர். இவர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் பிரியங்க் கார்கே என்பவர் காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் மகனாவார்.

Comments (0)
Add Comment