சென்னை, திருவொற்றியூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 138 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (26.08.2023) விம்கோ நகர், மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் MRF சோதனைச்சாவடி அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், குட்கா புகையிலை பொருட்கள் எடுத்து வந்த சென்னை எண்ணூரைச் சேர்ந்த சிவலிங்க பெருமாள், 40 என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சிவலிங்க பெருமாள், எண்ணூரில் உள்ள ஒரு இடத்தில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து அங்குள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி இடத்திலிருந்து 138 கிலோ எடை கொண்ட கூலிப், ஹான்ஸ், ரெமோ பாக்கு ஆகிய குட்கா புகையிலை பாக்கெட்டுகள். 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி சிவலிங்க பெருமாள் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.