ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் தனது மூதாதையர்களான ரமேஷ் அகர்வால் மற்றும் சுபாஷ்சந்த் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள 16 கிரவுண்ட் 1,400 சதுரடி இடம் உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஷாஜகான், அமீர்ஜான் மற்றும் குஜராத்தை சேர்ந்த முகேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து பொது அதிகார பத்திரம் பதிவு செய்து ஷாஜகான் மற்றும் அமீர்ஜான் பெயருக்கு கிரையப்பத்திரம் பதிவு செய்து மேற்படி சொத்தை அபகரித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில், சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery Investigation Wing) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேற்படி வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி ஆலோசனையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு. மோசடி புலனாய்வு பிரிவு (Forgery Investigation Wing), காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த முகேஷ் என்பவரை கடந்த 13.01.2024ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் தொடர்புடைய ராயபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (56), அடையாறு அமீர்ஜான் (43) ஆகிய 2 நபர்களை 10.03.2024 அன்று கைது செய்து, நீதிமன்றக்கில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.