சென்னை பெருநகரில் கடந்த 2023ம் ஆண்டு மொத்தம் சுமார் ரூ. 19.21 கோடி மதிப்புள்ள, 3337.41 சவரன் தங்க நகைகள், 50.53 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.3,60,73,051-, 798 செல்போன்கள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் மற்றும் 15 இலகுரக வாகனங்கள் மீட்கப்பட்டன.
அவற்றை இன்று (03.02.2024) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டு உரிய முறையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் 2023ம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ. 265 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), கபில்குமார் சி சரட்கர் (தலைமையிடம்), அஸ்ரா கார்க் (வடக்கு), காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.