ரமலான் சிந்தனை: பசியோடு சாவதை விட படிப்பின்றி வாழ்வது அவமானம்! அ. முகமது ஜியாவுதீன்

இன்று 11.03.2024 இரவு பிறை பார்க்கும் நிகழ்வு, இன்ஷா அல்லாஹ், புனிதமிக்க ரமலான் மாதம் துவங்க இருக்கிறது. நன்கொடை, ஸதகா, ஜக்காத் கேட்கும் பதிவுகள் நிறைய இப்போதே பகிரப் படுகிறது. நோன்பு துவங்கிய பிறகு உங்கள் ஜகாத்தை எங்களுக்கே கொடுங்கள் என்றும் நாங்கள் தான் உண்மையான சமூக அக்கறை கொண்ட அமைப்பு என்றும் பிரச்சாரங்கள் வர தொடங்கும். பாதியில் நிற்கும் பள்ளிவாசல் பணிகளை முடிக்கவும், கடனில் இருக்கும் மதரசாக்களை நடத்தவும் புனரமைக்கவும் நன்கொடை கேட்கும் பதிவுகளும் வரும்.

ஆனால், கல்வி சம்பந்தமான அக்கறை கொண்ட பதிவுகளோ, படிக்க ஆர்வம் இருந்தும் வழி தெரியாத / வசதி இல்லாத இளைஞர்களுக்கு வழிகாட்டும் தனி பயிற்சி மையங்களோ, அரசு வேலை குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கக்கூடிய அறிவு சார் மையங்களோ, அது தொடர்பான பதிவுகளோ தேடினாலும் ஒன்று, இரண்டு கண்ணில் படுவது கடினம். ஒரு இறை நம்பிக்கையாளரும் (முஃமினும்), இறை மறுப்பாளரும் (காபிரும்) கடலில் வீழ்ந்தால் அவர்களில் யாருக்கு நீச்சல் தெரியுமோ அவர் மட்டுமே தப்பித்துக் கொள்வார். அறியாமைக்கு அல்லாஹ்வின் ஆதரவு கிடைக்காது. கல்லாத முஸ்லிம் மூழ்கி விடுவார். கற்றுக் கொண்ட காபிர் தப்பித்துக் கொள்வார்” என்கிறார், முஸ்தபா மஹ்மூத் (ரஹ்)

இதைவிட கல்வியின் அவசியத்தை விளக்க முடியாது. உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள் கல்வியில் பின் தங்கி வறுமையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் வளர வழிகாண வேண்டும். தனித்தனியாக சிறு சிறு குழுக்களாக இருக்கும் உதிரி சமுதாயம் உருப்பட முடியாது.

வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி போல், சென்னை லயோலா, பாளையங்கோட்டை St. சேவியர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிகள் போல் பெரிய கல்வி நிறுவனங்கள் போல் உருவாகாமல் தடுத்தது எது?

மாற்றம் வர வேண்டும்! வருகிற ரமலான் மாதம் ஜக்காத் தொகையை கல்வி வளர்ச்சிக்கு திட்டமிடுவோம். கல்வியின் மூலம் தான் அறிவு வளரும், அறிவு வளர்ந்தால் தான் சமூகம் உயரும். ஜக்காத் கொடுப்பதன் நோக்கம் பிச்சை எடுப்பதை ஊக்கப்படுத்துவது அல்ல, கவுரமாக வாழ வழி காட்டுவதாக இருக்க வேண்டும். உங்கள் உறவுகளில் இருக்கும் ஏழைக்குழந்தைகள் கல்வி பெற உதவி செய்யுங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நல்ல உணவும் கல்வியும் தர அரசுப்பள்ளிகள் தயாராக இருக்கிறது. படிக்க வைக்க வசதி இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.
ஆம், பசியோடு சாவதை விட படிப்பில்லாமல் வாழ்வது அவமானம்.

அன்புடன்,
அ. முகமது ஜியாவுதீன்.

 

Comments (0)
Add Comment