சென்னை சிறைத்துறை தலைமையகத்தில் ‘‘சிறைச்சந்தை விற்பனை நிலையத்தை’’ தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
தமிழக சிறைத்துறை இயக்குநராக டிஜிபி அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றது முதல் சிறைகளில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைக்கைதிகளுக்கு கணிணி பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, உணவு முறையில் மாற்றம், வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசுவது, கோடை வெயில் வெப்பத்தை தணிக்க நன்னாரி சர்பத், மோர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் “சிறைச் சந்தை” விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் தயாரிக்கப்படும் தரமான பொருட்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் சிறைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், சிறை நிர்வாகம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் சிறைவாசிகளின் படைப்புகளை உள்ளடக்கமாக கொண்ட‘சிறகிதழ்’ என்ற மாத இதழின் முதல் பிரதியை சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட சிறைத்துறை தலைமை இயக்குநர் டிஜிபி அமரேஷ் புஜாரி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.