10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் கோதாவில் குதித்தன. ஐதராபாத் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நீக்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் முதலில் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் மும்பையின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மா (28 ரன், 18 பந்து, 6 பவுண்டரி) டி.நடராஜனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் களம் புகுந்து நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் இஷான் கிஷன் 38 ரன்னிலும் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் யான்செனின் வேகத்தில் பணிந்தனர். இதில் சூர்யகுமார் அடித்த பந்தை மார்க்ரம் பாய்ந்து விழுந்து கேட்ச் செய்த விதம் சிலிர்க்க வைத்தது.
இதன் பின்னர் கேமரூன் கிரீனுடன், திலக் வர்மா இணைந்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மார்கோ யான்சனின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சரை விரட்டி அட்டகாசப்படுத்திய திலக் வர்மா தனது பங்குக்கு 37 ரன்கள் (17 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) திரட்டினார். தொடர்ந்து நடராஜனின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கிய கேமரூன் கிரீன் ஐ.பி.எல். போட்டியில் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட கேமரூன் கிரீன் 64 ரன்களுடன் (40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் டிம் டேவிட் (16 ரன்) ரன்-அவுட் ஆனார். ஐதராபாத் தரப்பில் மார்கோ யான்சென் 2 விக்கெட்டும், நடராஜன், புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 193 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ஹாரி புரூக்கும், மயங்க் அகர்வாலும் நுழைந்தனர். முந்தைய ஆட்டத் தில் சதம் அடித்து ஹீரோவாக மின்னிய ஹாரி புரூக் இந்த முறை ஒற்றை இலக் கத்தை தாண்டவில்லை. அவர் 9 ரன்னில் ஜாசன் பெரன்டோர்ப் பந்து வீச்சில் சிக்கினார். அடுத்த வந்த ராகுல் திரிபாதி (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் மார்க்ரம் (22 ரன்), அபிஷேக் ஷர்மாவும் (1 ரன்) ஏமாற்றினர்.
5-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலும், ஹென்ரிச் கிளாசெனும் ஜோடி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். பியுஷ் சாவ்லாவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய கிளாசென் (36 ரன், 16 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதே ஓவரில் மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்த ஓவரில் மயங்க் அகர்வாலும் (48 ரன், 41 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) நடையை கட்டினார். ஆனாலும் இறுதி கட்டத்தில் மார்கோ யான்சென் (13 ரன்), வாஷிங்டன் சுந்தர் (10 ரன்) அளித்த சிறிய பங்களிப்பு ஆட்டத்தை டென்ஷனான சூழலுக்கு கொண்டு வந்தது. கடைசி 2 ஓவர்களில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசி மிரட்டிய கேமரூன் கிரீன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது.
பரபரப்பான கடைசி ஓவரை தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் வீசினார். அவர் வீசிய 2-வது பந்தில் அப்துல் சமத் (9 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். 5-வது பந்தில் புவனேஷ்வர்குமார் (2 ரன்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் அர்ஜூனுக்கு கிடைத்த முதல் விக்கெட் இதுவாகும். ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.