தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த ஆசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து- 1 கிலோ 400 கிராம் கஞ்சா 6 செல்போன்கள், ரொக்கபணம் ரூபாய் 8000- மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன் பேரில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று (29.01.2024) தனிப்டையினர் தூத்துக்குடி, கதிர்வேல்நகர் பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33) என்பதும் அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 6 செல்போன்கள், ரொக்க பணம் ரூ. 8 ஆயிரம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி மணிகண்டன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின்னர் மணிகண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சியைில் அடைக்கப்பட்டார்.