அபிராமபுரம் பகுதியில் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பகுதியில் வசிக்கும் பெண் மருத்துவர் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டு அபிராமபுரம் பகுதியில் பொது மருத்துவம் பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18.11.2023 அன்று இரவு கிளினிக்கில் இருந்தபோது, சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருந்து சீட்டில் ஆபாசமாக எழுதி, டாக்டரிடம் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே, மருத்துவர் சத்தம் போட்டு, வெளியில் இருந்த நபர்களை அழைத்தபோது, அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து மருத்துவர் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எல்லப்பன் (வயது 49) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எல்லப்பன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (19.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.