2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (58). கடந்த 24.03.2017 அன்று முன்விரோதம் காரணமாக முருகன் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக சாயர்புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாயர்புரம், புளியநகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் பொன்சேகர் (59) என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஞானபிரகாசி மற்றும் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 16.06.2017 அன்று கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாயர்புரம் போலீசார் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று (30.01.2024) இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளியான பொன்சேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஞானபிரகாசி மற்றும் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் இளையராஜா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.