தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்: எடப்பாடி தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து

அனைவரது வாழ்விலும்‌ மகிழ்ச்சியும், இன்பமும்‌ பொங்கட்டும் என தமிழ்‌ புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்‌ புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. பொதுச்‌ செயலாளரும், முன்னாள்‌ முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்‌ செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்‌ புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில்‌, அன்புக்குரிய தமிழ்‌ பெருமக்கள்‌ அனைவருக்கும்‌ எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌கொள்கிறேன்‌. பல்லாண்டு காலமாய்‌ சித்திரை முதல்‌ நாளை தமிழ்‌ புத்தாண்டாகக்‌ கொண்டாடிய மக்கள்‌, அந்த நாள்‌ வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டபோது மனமுடைந்த நிலையில்‌, உலகத்‌ தமிழர்களின்‌ ஒருமித்த உணர்வின்படியும்‌, உளப்பூர்வ விருப்பத்தின்படியும்‌, சித்திரை முதல்‌ நாளே தமிழ்‌ புத்தாண்டு திருநாள்‌ என்பதை புரட்சித்‌ தலைவி அம்மா மீண்டும்‌ உறுதி செய்ததை, இந்த இனிய நன்நாளில்‌ பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்‌. புதிய சாதனைகளைப்‌ படைத்து, புதிய வெற்றிகளைப்‌ பெற்று, வழிமறிக்கும்‌ தடைகளை எல்லாம்‌ தகர்த்து, வளமான தமிழகத்தைப்‌ படைத்திடுவோம்‌ என இப்புத்தாண்டில்‌ நாம்‌ அனைவரும்‌ உறுதி ஏற்போம்‌.

மலர இருக்கும்‌ “சோபகிருது” ஆண்டில்‌, தமிழர்கள்‌ அனைவரது வாழ்விலும்‌ மகிழ்ச்சியும்‌, இன்பமும்‌ பெருக வேண்டும்‌; எல்லோரும்‌ எல்லாமும்‌ பெற வேண்டும்‌; தமிழர்‌ தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்‌ என்று மனதார வாழ்த்தி, உலகெங்கும்‌ வாழும்‌ தமிழ்‌ பெருமக்கள்‌ அனைவருக்கும்‌, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது வழியில்‌, எனது உளமார்ந்த தமிழ்‌ புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை உரித்தாக்கிக்‌ கொள்கிறேன்‌.

நல்லதே நடக்க, நானிலம்‌ சிறக்க, மகிழ்ச்சி பொங்க, மனிதநேயம்‌ சிறக்க, வரவேற்கிறது தமிழ்‌ புத்தாண்டு; வாழ்வோம்‌ பல்லாண்டு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment