நெருங்கிய உறவினர், ஆசிரியர் ஆகியோரால் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிற செய்திகள் செய்தித்தாள்களில் அடிக்கடி வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே, அது தொடர்பான போக்சோ சட்டம் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
போக்சோ சட்டம்: POCSO Act:
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை (சிறார்களை) பாதுகாக்கும் சட்டம். ஆண், பெண் என்ற பாலின வித்தியாசமின்றி 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகின்றது.
இந்த சட்டத்தின் பிரிவுகள் பிணைவிடா (Non Bailable) குற்றங்களாகும். இந்த சட்டத்தின்
பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் ஆகும். இதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகளும், அதிக பட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 5 மற்றும் 6 படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், காப்பாளர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். உடன் அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது (பாலியல் சீண்டல்) குற்றம். இதற்கு, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், காப்பாளர் ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
சட்டப் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றமாகும். அது இணைய தளம், அல்லது கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 18ன் படி குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, உடந்தையாக இருப்பவருக்கும் குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். அதற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். வயது வரம்பு தொடர்பாக 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டு, அதிக பட்சம் ஆயுள் தண்டனை என்று இருந்ததை அவசர சட்டத்தின் மூலம் மரண தண்டனை என்று மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறை உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக, இந்து தமிழ்திசை நாளிதழில் கட்டுரை வெளியாகி இருந்தது என்பது வேதனைக்குரியதாகும்.ஆனால், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் விரைவாக வழக்குகள் நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
எதிர்காலத்தில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றின் தீமை குறித்து விழிப்புணர்வு செய்வதைபோல் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகள் தோறும் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.(ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்களே இத்தகைய இழி செயலில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்திகளைக் காண்பது வேதனைக்குரியது) குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதும், குற்றங்களை வெளிக் கொணரும் தைரியம் வளர்ப்பதும் குற்றங்களைக் தடுக்க வழி வகுக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல் இல்லாது குழந்தைகளைக் காப்போம்.
அ. முகமது ஜியாவுதீன்.முழுநேர உறுப்பினர்,
மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம், தமிழ்நாடு.