சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி பெயரில் கேலரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டானின் திறந்து வைத்தார்.

இந்தியாவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியமாகும். கடந்த 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்ததை முன்னிட்டு இந்த ஸ்டேடியத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டன. ஆனால் பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) பகுதி மட்டும் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி. பகுதி கேலரிகள் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த இரண்டு கேலரிகளும் சுமார் ரூ.110 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு கேலரிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கலைஞர் எம்.கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கேலரியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி புதிய கேலரிகளை திறந்து திறந்து வைத்ததுடன், ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை சுற்றிப் பார்த்தார்.

விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி, முன்னாள் தலைவர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, பவுலிங் பயிற்சியாளர் வெய்ன் பிராவோ, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெவிலியன் பகுதியில் கட்டப்பட்டுள்ள கேலரி 3 அடுக்குகள் கொண்டதாகும். இதன் தரைதளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வீரர்கள் தங்குமிடம் உள்ளது. முதல் தளத்தில் உள்ளரங்க வலைப்பயிற்சி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது. மேலும் அங்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது.

புதுப்பொலிவு பெற்றுள்ள சேப்பாக்கம் ஸ்டேடியம் 38 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டதாகும். இந்த ஸ்டேடியத்தில் வருகிற 22-ந் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கு ஐ.பி.எல். ஆட்டங்கள் நடக்க உள்ளன.

Comments (0)
Add Comment