காவல் வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்: காவல் ஆணையர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் துணைவியார் மற்றும் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று துவங்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்புத்துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கைகள் தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், சென்னை நகர காவல் ஆணையர் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார். இன்றும் (18.03.2023), நாளையும் (19.03.2023) என 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் வாரிசுகளின் கல்வி தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

மேலும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளிடம் இருந்து சுய விவரங்கள் பெறப்பட்டு, இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மேற்படி சீருடைப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 1,000 நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி மற்றும் துணைக்கமிஷனர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்பட போலீஸ் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment