நூதன முறையில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 8 பேர் கும்பல் கைது

வங்கிகளை மோசடி செய்யும் நோக்கில் பஞ்சாயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தினை பிளாட்டுகள் போட்டு அதை அடமானமாக வைத்து கடன் பெற்று ரூ. 12 கோடி மோசடி செய்த 8 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, அண்ணாசாலை, இந்தியன் வங்கியின் மூத்த மேலாளர் அனிஷ்கிருஷ்ணா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘எங்களது கிளையில் செப்டம்பர் 2020ம் ஆண்டு பாலசுப்ரமணியன் என்பவர் பிரகதி ஏஜென்சீஸ் என்ற பெயரில் ரூ. 90 லட்சம் தொழிற்கடன் பெற்று குன்றத்தூர் தாலுக்கா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள் உபயோகத்திற்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தினை அடமானம் வைத்து மோசடி செய்துள்ளார்,

மேலும் பேங்க் ஆப் பரோடா, கொளத்தூர் கிளை மேலாளர் ராஜா ரஞ்சித்குமார் என்பவர் கொடுத்த புகாரில் ‘எங்கள் கிளையில் நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை சங்கரேஷ்வரி என்பவர் தான் நடத்திவரும் Bay Leaf, Golden Leaf, Akshaya Woodands நிறுவனங்கள் பெயர்களிலும், சூர்ய நாராயணன் என்பவர் HMB Foods பெயரிலும், சிவரஞ்சனி என்பவர் தான் நடத்திவரும் Cardamn Garden, Etics Aroma, Green leaf நிறுவனங்கள் பெயரிலும் கடன் பெற்றுள்ளனர். மேலும் சிவராஜ் என்பவர் Saira Foods, Deviprasadam Annalaya நிறுவனம் பெயர்களிலும், குமார் என்பவர் SriSa iNeivedhyam, Siddhi Enterprises, SriSai Aqua நிறுவனங்கள் பெயரிலும் மொத்தம் ரூ- 11.06 கோடி தொழிற்கடன்கள் பெற்றுள்ளனர். இதற்காக குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள் உபயோகத்திற்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தினை பொது அதிகார முகவர்கள் மூலம் வாங்குவது போல் காண்பித்து அவற்றை வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியன் வங்கி மூத்த மேலாளர் அனிஷ்கிருஷ்ணா, பாங்க் ஆப் பரோடா நிர்வாகி அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி அறிவுரையின் பேரில் துணைக்கமிஷனர் நாகஜோதி கண்காணிப்பில், கூடுதல் காவல் துணை ஆணையாளர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் வங்கிமோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மனோஜ்குமார், ஆய்வாளர்கள் புஷ்பராஜ், சிவகுமார், சரவணன், 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 15 காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

அதனையடுத்து வங்கி மோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரம், ஆதனூரைச் சேர்ந்த மாலா (வயது 51), கூடுவாஞ்சேரி பாலசுப்ரமணியன் (47), அம்பத்தூர் விக்னேஷ் (32), கொரட்டூர் முத்துசெல்வன் (44), அவரது மனைவி சிவரஞ்சனி (37), கொரட்டூர் செங்கரேஸ்வரி (40), இவரது கணவர் சீனிவாசன் (46), கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த சிவராஜ் (41) ஆகியோரை நேற்று 01.08.2023ம் தேதி வெவ்வேறு இடங்களில் வைத்து 3 பெண்கள் உட்பட 8 நபர்கள் அடங்கிய மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

இதில் சிவரஞ்சனி மற்றும் முத்துசெல்வன், சங்கரேஷ்வரி மற்றும் சீனிவாசன் ஆகியோர் கணவன் மனைவியர் மற்றும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தங்கள் ஓட்டலில் வேலை செய்யும் விக்னேஷ் என்பவர் பெயரில் இடத்திற்கு பொது அதிகாரம் பெற்று அவரிடமிருந்து வாங்குவது போல் பத்திரபதிவு செய்துள்ளனர். புலன் விசாரணையில் வீனஸ் எண்டர்பிரைசஸ் என்ற கட்டிட நிறுவனத்தை நடத்திவரும் கே.சி. போஸ் என்பவர் குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தினை சுற்றி 1987ம் ஆண்டு முதல் MG நகர் Part I முதல் Part XIV என நிறைய பிளாட்கள் போட்டு விற்பனை செய்துள்ளார்.

ஒவ்வொரு Part க்கும் DTCP விதிமுறைகள் படி குறிப்பிட்ட இடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க கொடுக்க வேண்டும். அந்த வகையில் Part X, XI, XII, XIV ஆகியவற்றிற்கும் குறிப்பிட்ட இடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தான செட்டில்மெண்ட்கள் மூலம் 1989 மற்றும் 1990 வருடங்களில் பத்திரவு செய்து ஆதனூர் பஞ்சாயத்திற்கு தானமாக கொடுத்துள்ளார். 2020ம் ஆண்டு கொரோனா காலத்தின்போது வங்கிகளில் தொழில் வளர்ச்சிக்காக தாராளமாக கடன் கொடுப்பதை அறிந்து வங்கிகளில் மோசடி செய்யும் நோக்கில் மேற்படி MG Nagar Part X, XI, XII, XIV ஆகியவற்றில் ஆதனூர் பஞ்சாயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட சர்வே எண்கள் உள்ள இடங்களில் மனை பிரிவுகள் இருப்பதுபோல் போலியான DTCP அப்ருவல்கள் தயாரித்து சர்வே எண்களை மாற்றியும் அந்த இடங்களை மேற்படி கடன்தாரர்களின் விருப்பத்துடனே அவர்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் பொது அதிகாரம் வழங்கி அந்தபொது அதிகார முகவர்கள் மூலம் மேற்படி பாலசுப்ரமணியன், சீனிவாசன், முத்துசெல்வன், சிவராஜ் ஆகியோர்களுக்கு விற்பனை செய்தும் சில இடங்களை கே.சி.போஸ் தானே நேரடியாக விற்பனை செய்தும் உள்ளனர்.

பின் அந்த இடங்களை வங்கிகளில் அடமானம் வைத்து பெயருக்கு ஆரம்பித்த நிறுவனங்கள் பெயரில் சௌத் இந்தியன் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் தொழிற்கடன் பெற்று அந்த கடன்களை சரிவர செலுத்தாமல் வங்கிகளில் சுமார் ரூ. 12 கோடி மோசடி செய்துள்ளனர். தானமாக வழங்கப்பட்ட இடங்கள் என்பதால் வங்கி தரப்பினர் அந்த இடங்களை கைப்பற்ற இயலாதவாறு மேற்படி மோசடி கும்பல் நூதனமான முறையை கையாண்டுள்ளனர்.

மேலும் வங்கி மதிப்பீட்டாளர்கள் இடத்தை பார்க்க வரும்போது போலியாக எல்லை கற்களை நட்டு அதில் வண்ணம்பூசி எண்கள் எழுதி ஏமாற்றியுள்ளனர். இதில் மேற்படி இடங்களை விற்ற வீனஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனர் கே.சி.போஸ் கடந்த 25.07.2023 அன்று இறந்துவிட்டார். இதற்கு துணையாக இருந்த ஆதனூரை சேர்ந்த பாபு என்பவர் 2021 கொரோனாவில் இறந்து விட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் மத்திய குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி மோசடி கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு தனிப்படையினரை காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.

Comments (0)
Add Comment