சென்னையில் காணாமல் போன மேற்கு வங்காள நபர் கண்டுபிடித்த குடும்பத்துடன் சேர்த்து வைத்த தலைமைக்காவலர்

மேற்குவங்காளத்திலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்து காணாமல் போன வயதான நபரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.

கடந்த 15.11.2023 அன்று சென்னை பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் ஒரு வயதான நபர் சாலையில் மயங்கி விழுந்துள்ளதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் பேசின் பாலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரத்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததால், அவரது பெயர் விவரம் தெரியாமல் இருந்தது. அந்த நபரை தனது செல்போனில் படம் பிடித்து பேசின் பாலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று (17.11.2023) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த செய்யது நூர் ஜமால் (56) என்ற நபர் மருத்துவ சிகிச்சைக்காக தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்து காணாமல் போனதாகவும், இவரை பற்றிய விவரங்கள் கிடைத்தால் தகவல் தெரிவிக்கவும் என காணாமல் போன நபரின் புகைப்படம் மற்றும் விவரங்களுடன் பூக்கடை காவல் நிலையம் மூலம் காவல் வாட்சப் குழுவில் அனுப்பியிருந்தனர். இதனை கண்ட தலைமைக் காவலர் சரத்குமார், காணாமல் போன செய்யது நூர் ஜமால், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நபர் என தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் சரத்குமார், காவல் ஆய்வாளர் மூலம் பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, காணாமல் போன செய்யது நூர் ஜமாலின் உறவினர்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, சிகிச்சை பெற்று வரும் நபர் காணாமல் போன செய்யது நூர் ஜமால் என தெரியவந்தது.

அதன்பேரில், உரிய சட்ட நடவடிக்கைகளின் படி செய்யது நூர் ஜமால் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு, காணாமல் போன நபரை அவரது குடும்பத்தாருடன் ஒப்படைக்க உதவிய பேசின்பாலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரத்குமாரை காவல் அதிகாரிகள் பாராட்டினர்.

Comments (0)
Add Comment