‘‘ஆக்சிடண்ட் இழப்பீடுல பாதி அமவுண்ட்டு எனக்கு வந்துரனும்’’ என புகார்தாரர்களிடம் நேரடியாக லஞ்சம் வசூல் செய்த பெண் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்சை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘சரவெடி’யாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராணி. இவர் மீது ஆரம்பத்தில் இருந்தே ஏராளமான லஞ்சப்புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவருக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனியாக தனது சொந்த செலவில் டிரைவரை நியமித்ததாக தெரிகிறது. மேலும் இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த செல்லும் போது அந்த தனியார் டிரைவரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு, அவருக்கு வேண்டிய வக்கீல்களை வரவழைத்து
பின்னர் விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விட்டு, அவருக்கு வேண்டிய வக்கீல்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, இன்ஸ்பெக்டர் என்ற முறையில், மிரட்டி வந்துள்ளார்.
அதன் பின்னர் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை இன்ஸ்பெக்டர் ராணி மிரட்டி எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமல்ராஜ் பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையாவுக்கு உத்தரவிட்டார். ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில் ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிவந்ததை அடுத்து அதனை அறிக்கையாக காவல் ஆணையரிடம் தாக்கல் செய்தார். அதனையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராணி கடந்த ஆகஸ்ட் மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் காமினி தலைமையில் கடந்த 7 மாதமாக இன்ஸ்பெக்டர் ராணி மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. அதிலும் பல்வேறு முறைகேடுகளில் ராணி ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து ராணியை நிரந்தரப் பணி நீக்கம் அதாவது காவல்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.