கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார்.

சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு ஒவ்வொரு மாதமும் “நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கமிஷனர் கையால் பாராட்டு பெற்று வருகின்றனர். மேலும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000/- பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜுலை- 2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14.07.2023 அன்று, சைதாப்பேட்டை, வி.வி.கோயில் தெருவில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் பறித்துச் சென்றனர். அன்றைய தினம் குமரன் நகர் காவல் நிலையத்தில் அயல்பணியில் இருந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற சுமார் 20 கி.மீ. தூரம் வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, பாலாஜி மற்றும் இளந்தளிர் ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்ய திறமையாக பணிபுரிந்துள்ளார். மேலும் குற்றவாளிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மெச்சத்தகுந்த பணிக்காக செந்தில்குமாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று நேரில் அழைத்து ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ. 5,000 – வழங்கி பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment