தாம்பரம் மாநகர காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சேலையூர் சரகம் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் நேற்று 24.02.2024 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜாலி பே பார் அருகே பிரவீன் (-26) என்பவரை ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்த பிரவீனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை செய்ததில் பிரவீன் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த நவம்பர் மாதம் காதலித்து பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணின் அண்ணன் தினேஷ் முன்விரோதம் கொண்டு அவனது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டு தாக்கியது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் காயமடைந்த பிரவீன் அரசு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.