சென்னை, வண்ணாரப்பேட்டை, ராமாபுரம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் போதை பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7.2 கிலோ கஞ்சா, 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரொக்கம் ரூ. 7,430 மற்றும் 1 எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW Washermenpet) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (17.03.2023) மாலை மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த மதன்குமார் (33) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மதன்குமார் விசாரணைக்குப்பின்னர், இன்று (18.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
அதே போல ராமாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (16.03.2023) இரவு, ராமாபுரம், ஆறுமுகம் நகர் பகுதியில் கண்காணித்து, அங்கு சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த கவுதம் (23), மாரிமுத்து (எ) மாரி (27), சதிஷ் (25) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம், ரொக்கம் ரூ. 7,430-, 1 எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி கௌதம் மீது, ஏற்கனவே 1 திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப்பின்னர், நேற்று (17.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் முத்தையால்பேட்டை போலீசார் நேற்று (17.03.2023) மதியம் பிராட்வே, பிரகாஷம் சாலை மற்றும் அம்மன் கோயில் சந்திப்பு அருகே மெத்தம்பெட்டமைன் எனும் போதை பொருள் வைத்திருந்த மயிலாப்பூர் அதிகுர் ரகுமான் (23), ராயப்பேட்டை முகமது ரியாஸ் (21), யஸ்வந் ரமேஷ் (24), மேற்குமாம்பலம் சத்தியநாராயணன் (22) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவரிகளிடமிருந்து 4.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (17.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வகையில் மேற்படி 3 வழக்குகளில் 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, மொத்தம் 7.2 கிலோ கஞ்சா, 4.5 கிராம்மெத்தம்பெட்டமைன், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், ரொக்கம் ரூ.7,430/- மற்றும் 1 எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.